இனி இலவச போன்கால் கிடையாது என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளதை அடுத்து, வோடோஃபோன், ஏர்டெல் நிறுவனங்களுக்கான பங்குகள் அதிகரித்துள்ளன.
தொலைத்தொடர்பு நெட்வொர்ட் துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வரவால் ஏர்டெல், வோடோஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வந்தன. அதிரடியான அறிவிப்புகளால் மற்ற நிறுவனங்களை ஜியோ திக்குமுக்காட வைத்தது. இலவச போன்கால், அதிகப்படியான இணையசேவை இவைதான் ஜியோவின் பலம். ஜியோவுக்கு போட்டியாக மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் பல அறிவிப்புகளை வெளியிட்டு பார்த்தன. இன்றளவும் ஜியோதான் முன்னிலையில் உள்ளது.
இதனிடையே, ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. ஜியோவில் போன்கால்கள் இனி இலவசம் கிடையாது என்பதுதான் அந்த அறிவிப்பு. இனி ஜியோவில் ஒரு போன் கால்க்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக இணைய சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களை சற்றே கவலை கொள்ள வைத்துள்ளது.
இதுஒரு புறம் இருக்க, ஜியோவின் இந்த அறிவிப்பு அதன் போட்டியாளர்களாக வோடோஃபோன் - ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜியோவின் அறிவிப்பு மட்டுமே இதற்கு காரணம் அல்ல. அந்த அறிவிப்பின் எதிரொலியால் வோடோஃபோன், ஏர்டெல் நிறுவனங்களில் பங்குகள் அதிகரித்துள்ளதுதான் மகிழ்ச்சிக்கு காரணம்.
வோடோஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இது மிகப்பெரிய ஆதாயமாக அந்நிறுவனம் பார்க்கின்றது. அதேபோல், ஏர்டெல் நிறுவனத்தில் பங்குகள் 4.8 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது.