ஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை..ஆனால்..? - ஜவடேகர் விளக்கம்

ஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை..ஆனால்..? - ஜவடேகர் விளக்கம்
ஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை..ஆனால்..? - ஜவடேகர் விளக்கம்
Published on

ஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

உலக தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக் கழகங்களை கொண்டு வருவதற்காக என்.கோபால்சுவாமி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மானியம் வழங்கும் நோக்கில், பல்வேறு பல்கலைக்கழகங்களை இக்குழு ஆய்வுசெய்தது.

இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் சையின்ஸ்(IISc) பெங்களூரு, மும்பை, டெல்லி ஐஐடி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள ரிலையன்ஸ் பவுண்டேஷனின் ஜியோ இன்ஸ்டியூட்  உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்கள் சிறப்பு அந்தஸ்தத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த நிறுவனங்களுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். 

மத்திய அரசு தேர்வு செய்த கல்வி நிறுவனங்களில் ஜியோ இன்ஸ்ட்டியூட்-ம் இருந்தது. இன்னும் தொடங்கப்படாத ஜியோ கல்வி நிறுவனம் எப்படி சிறப்பு அந்தஸ்துக்காக தேர்வு செய்யப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்ட்டியூட் என்ற கல்லூரிக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கியது தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமா என்று நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி எஸ்.ஆர்.விஜயகுமார் கேள்வி எழுப்பினார். 

இதுதொடர்பாக மாநிலங்களவையில் பிரகாஷ் ஜவடேகர் அளித்த விளக்கத்தில், “ஜியோ கல்வி நிறுவனத்துக்கு தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. அத்தகைய சிறப்பு அந்தஸ்தை அந்தக் கல்வி நிறுவனத்துக்கு வழங்கும் நோக்கம் இருப்பதை தெரிவிப்பதற்கான கடிதம் மட்டுமே தற்போது அளிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 3 ஆண்டுகளில் அத்தகைய அந்தஸ்தை பெறும் வகையில் அந்த நிறுவனம் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டு, நிபுணர்கள் குழுவின் எதிர்ப்புகளை பூர்த்தி செய்தால் மட்டுமே ஜியோ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். ஜியோ கல்லூரி உட்பட 11 நிறுவனங்களிடம் இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

உலகின் தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக் கழகங்கள் எதுவும் இடம்பெறவில்லை. முதல் கட்டமாக 10 பல்கலைக் கழகங்களின் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பல பல்கலைக் கழகங்களில் அதில் சேர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் மூன்று அரசு சார்ந்த நிறுவனமும், மூன்று தனியார் நிறுவனங்களும் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தனியார் நிறுவனங்களில் ஒன்று ‘கிரீன்பீல்டு’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிரீன்பீல்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் பல நிறுவனங்கள் விண்ணப்பித்தன. பேப்பர் அளவில் உள்ள 11 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் ஜியோ நிறுவனத்தின் செயல் திட்டம் ஏற்புடையதாகவும், சிறப்பாகவும் இருந்ததது. அதன் அடிப்படையிலேயே நாட்டின் மிகச்சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ இன்ஸ்ட்டியூட் தேர்வு செய்யப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com