இரண்டரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செல்போன் சேவைக்கட்டண உயர்வை அதிகரித்துள்ளது. 5ஜி, AI தொழில் நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் இத்துறையில் புதுமைகளையும், வளர்ச்சியையும் நோக்கி பயணிப்பதாக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம், தனது அனைத்து சேவைகளுக்குமான கட்டணத்தையும் அதிகரிக்கிறது. இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 15 ரூபாயில் இருந்து 19 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. 75 GB போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கட்டணம் 399 ரூபாய், இனி 449 ரூபாயாக உயர்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 666 ரூபாய் அன்லிமிடெட் திட்டத்தின் கட்டணம் 20 சதவிகிதம் அதிகரித்து 799 ரூபாயாக இருக்கும்.
ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களுக்காக கட்டணம் 20 முதல் 21 சதவிகிதம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி 1559 ரூபாய் கட்டணம் இனி 1899 ரூபாயாகவும், 2,999 ரூபாய் கட்டணம் 3,599 ரூபாயாகவும் உயர்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா அனைத்து சேவைகளிலும் கிடைக்கும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.