ஜியோ வாடிக்கையாளர்கள் தகவல்கள் வெளியான விவகாரம் - ஹேக்கர் கைது
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக எழுந்த புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மராட்டிய மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ சிம் வைத்திருக்கும் 12 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்களும் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக கூறப்பட்டது. அதாவது, வாடிக்கையாளர்களின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, பகுதி, சிம் கார்ட் ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண் என அனைத்துத் தகவல்களையும் அந்த இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக பரவி வந்த நிலையில், இதை ஜியோ நிறுவனம் மறுத்தது. தங்களது வாடிக்கையாளர்களின் விபரங்கள் முழு பாதுகாப்போடு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான புகாரில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை மராட்டிய மாநில சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த இளைஞர் ஹேக்கராக செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த கணினி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.