சென்னையில் ஜியோ 5ஜி சேவை துவங்கப்படுவதாக அந்நிறுவனத்தின் சேர்மன் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஜியோ 5ஜி சேவை தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலும் 5ஜி சேவை துவங்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் சேர்மன் ஆகாஷ் அம்பானி அறிவித்தார்.
ஏற்கனவே ஜியோ 5ஜி சேவை மும்பை, டெல்லி, வாரணாசி, மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஜியோ 5ஜி சேவை தொடங்கப்படுவதாக ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள பிரபல ஸ்ரீநாத்ஜி ஆலயத்தில் அறிவித்தார் ஆகாஷ் அம்பானி. அதே வேளையில் நிகழ்ச்சி நடைபெற்ற நாத்துவாரா நகரத்திலும் ஜியோ 5ஜி சேவைகளை தொடங்குவதாக அவர் அறிவித்தார்.
“5ஜி சேவை இன்று முதல் தமிழகத்தில் சென்னை, ராஜஸ்தான் மாநிலத்தில் நத்வரா உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நத்வரா மற்றும் சென்னையில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜியோ 5ஜி வைபை சேவை இன்று முதல் தொடங்குகிறது” என ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
ஆகாஷ் அம்பானி சமீபத்தில் ஜியோ நிறுவனத்தின் சேர்மன் பதவிக்கு நியமிக்கப்பட்டார். முன்னதாக முகேஷ் அம்பானி ஜியோ தலைமை பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
5ஜி புரட்சிக்கு ஆயத்தமாகும் ஜியோ!
அக்டோபர் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் அதிவேக 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார். அதனையடுத்து இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சேவையை இந்தியா முழுவதும் தொடங்கி வருகின்றனர். முதற்கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் சென்னை, ராஜஸ்தான் மாநிலத்தில் நத்வரா ஆகிய இரு பகுதிகளில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது ஜியோ நிறுவனம். மேலும் 2023ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி புரட்சியை ரிலையன்ஸ் ஜியோ வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.