ஜார்க்கண்ட் மாநிலத்தில், கணவருடன் சென்ற பெண்ணை 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் செவ்வாய்க்கிழமை இரவு சந்தைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த ஒரு கும்பல், அவர்களை மடக்கி கடத்தியது. அப்போது கணவரை பிணைக்கைதியாக பிடித்து வைத்த அந்த கும்பல், மனைவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 17 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கை அளிக்கும்படி மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரண்டு மாதங்களில் விசாரணைகளை முடிப்பது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஜார்க்கண்ட் டிஜிபிக்கு மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார்.