ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நிகழ்ந்த போது எடுக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நிகழ்ந்த போது எடுக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்று பாபா வைத்யநாத் கோயில். இது ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ளது. திரிகுட் மலை மீது சென்று இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக அம்மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவாகும். 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் நீளம் கொண்டது. இந்நிலையில் சமீபத்தில் ரோப் கார்கள் மூலம் கோயிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். ரோப் கார்கள் மலை உச்சியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். ரோப் கார்களில் சிக்கியிருந்தவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து 44 மணி நேர மீட்புப் பணியில் இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோப் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விபத்துக்குள்ளாகும் காட்சியை அதில் பயணித்த நபர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இது தொடர்பான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.