ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக கஞ்சா கடத்தலில் பிடிபட்டால் கிலோ கணக்கில்தான் பிடிபடும். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் இதுவரை நாம் கேட்டிரா அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 7 குவிண்டால் கஞ்சா, 23 சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு கடத்தப்பட்டபோது போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ராஞ்சி - பாட்னா செல்லும் தேசிய நெடுஞ்சாலை 33-இல் மண்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஹாசாகர்ஹா கிராமத்தில் சென்றுகொண்டிருந்த லாரியை போலீசார் மடக்கி சோதனையிட்டபோது போலீசாருக்கே ஷாக் அடித்ததுபோல் கிடைத்திருக்கிறது 23 சாக்குப் பைகள். அதை பிரித்து பார்த்தபோது அனைத்துப் பைகளிலும் கஞ்சா. அதிலிருந்த கஞ்சாவின் விலைமதிப்பு கிட்டத்தட்ட ரூ.1 கோடி என்று தெரிவித்துள்ளார் காவல்துறை கண்காணிப்பாளர் பியூஷ் பாண்டே.
லாரியை ஓட்டிவந்த டிரைவர் மற்றும் உதவியாளரை போலீசார் கைதுசெய்து விசாரித்ததில் அவர்கள் அசாம் மாநிலம் கோகார்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஷங்கர் ராமாஷ்யாரி(28) மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த ரண்டு நமதா(30) என்பவர்கள் என தெரியவந்துள்ளது.