நாடாளுமன்றத் தேர்தல் வேகம் பிடித்துவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அதன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்தும் தேர்தல் சம்பந்தமான பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன.
இந்த நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகிய பொறுப்புகளை வகித்த தமிழிசை செளந்தரராஜன், தாம் வகித்த ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, இதுகுறித்து அவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தொடர்ந்து தனது ராஜினாமா குறித்து பேசியிருந்த அவர், “தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் நான் மனமுவந்து ராஜினாமா செய்துள்ளேன். தெலங்கானா, புதுச்சேரி மக்கள் என்மீது காட்டிய அன்பிற்கு நான் நன்றியுடையவளாக இருப்பேன்.
எனது உள்ளக்கிடக்கை, மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்பது. மக்கள் ஆளுநராகத்தான் இரு மாநிலங்களிலும் இருந்தேன். இருப்பினும், தீவிரமான மக்கள் பணி ஆற்றவேண்டும் என்பதற்காக எனது விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்தேன். நேரடியான, நேர்மையான அரசியலுக்கே வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ததை அடுத்து தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஆளுநர் பதவிகள் காலியாகின
இந்நிலையில் அம்மாநிலங்களின் ஆளுநர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கான மாநில ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மாற்று ஏற்பாடு செய்யும்வரை கூடுதல் பொறுப்பில் சிபி ராதாகிருஷ்ணன் தொடர்வார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதியில், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார் தமிழிசை. இதில் கனிமொழி 5,63,143 வாக்குகளையும், தமிழிசை சௌந்தரராஜன் 2,15,934 வாக்குகளையும் பெற்றனர். கனிமொழி சுமார் 3.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழிசை தென்சென்னை தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. புதுச்சேரியில் போட்டியிடுவார் என்ற பேச்சுகளும் நேற்று எழுந்தது குறிப்பிடத்தக்கது.