ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் உள்ளது. இதன் பதவிக்காலம் விரைவில் நிறைவுபெறுவதையடுத்து, அங்கு மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ஆம் தேதி, 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 2வது கட்டமாக, நவம்பர் 20ஆம் தேதி 38 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை (நவ.23) நடைபெற இருக்கிறது.
தேர்தல் ஆரம்பித்த நாள் முதல் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸின் I-N-D-I-A கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும்..
ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 41 இடங்களிலும்,
காங்கிரஸ் 30 இடங்களிலும்,
ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 இடங்களிலும்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 4 இடங்களிலும் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில்..
பாஜக 68 இடங்களிலும்,
அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 இடங்களிலும்,
ஜனதா தளம் (ஐக்கிய) 2 இடங்களிலும்,
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 இடத்திலும் போட்டியிட்டன.
இந்த நிலையில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படுகின்றன. இதையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஜார்க்கண்ட்டில் அடுத்த பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றும் எனப் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் தெரிவித்திருந்தன.
ஆனால், ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு மட்டும் உறுதியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி வெற்றிபெறும் எனத் தெரிவித்திருந்தது. அதுபோல் டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பும் இரண்டு கூட்டணிகளும் 35-40 இடங்களை வெல்லும் எனத் தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்தக் கருத்துக்கணிப்புகளிலும் மாற்றம் நிகழலாம் எனக் கூறப்படுகிறது. ஹரியானா தேர்தலைப்போலவே இங்கேயும் மாற்றம் நிகழ வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜார்க்கண்ட்டில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து உயர் ரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் ராஞ்சியில், பிஸ்கா மோட், டில்டா சவுக், ரிங் ரோடு வரை நாளை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறிய சரக்கு ஆட்டோக்கள், இ-ரிக்ஷாக்கள் மற்றும் பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி நகரில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான சிறிய மற்றும் பெரிய சரக்கு வாகனங்கள் நுழைவதற்கும் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில், ஆளும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது. அன்றைய தேர்தலில் ஜேஎம்எம் 30 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ஆர்ஜேடி 1 இடத்தையும் கைப்பற்றியது. பிஜேபி 25 இடங்களிலும், ஜேவிஎம்-பி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு கட்சி 2 இடங்களிலும், சிபிஐ-எம்எல் மற்றும் என்சிபி தலா 1 இடத்திலும், 2 சுயேட்சைகளும் வெற்றிபெற்றன. பின்னர், ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவியேற்ற ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
அதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அதிருப்தியில் இருந்த சம்பாய் சோரன், பாஜகவில் இணைந்தார். தற்போது அவருக்கும் பாஜக போட்டியிட சீட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.