ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், கடந்த 2019ல் பெரும் இழப்பை சந்தித்து திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜலான் - கல்ராக் கூட்டமைப்பு ஏலத்தில் எடுத்து அதனை மறு கட்டமைப்பு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இயக்க தற்போது வரை ரூ.150 கோடி அளவுக்கு மட்டும் முதலீடுகள் பெற முடிந்துள்ளதால் பல கடுமையான முடிவுகளை நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தமது ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதி பேரை டிசம்பர் 1ஆம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு சம்பளம் இல்லாத விடுமுறை அளித்துள்ளதாகவும், இன்னும் பல ஊழியர்களுக்கு 50 சதவீதம் வரை சம்பளக் குறைப்பு அமல்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஓ சஞ்சீவ் கபூர், இது தற்காலிகமான முடிவுதான் என்று தெரிவித்துள்ளார்.