கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக, இந்த முறை தோல்வியைத் தழுவியது. அதுபோல் கர்நாடகாவின் முக்கியக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில், அதற்கான பணிகளில் அம்மாநிலக் கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.
இதையடுத்து, காங்கிரஸை வீழ்த்தும் நோக்கில் பாஜக - மஜத கூட்டணி வைக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்தச் சூழலில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்திருந்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும் கூறியிருந்தார். இதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (செப்.9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “"எடியூரப்பா நேற்று கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. நாங்கள் இரண்டு மூன்று முறை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளோம். என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நேரம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், “பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் முரண்படக்கூடிய கொள்கைகளைக் கொண்டிருப்பவை என்றும் எனவே, அவர்களுக்குள் கூட்டணி அமைந்தால் அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளார்களே” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு குமாரசாமி, ”பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் காரணமே மக்கள்தான். மக்களுக்கு இது தேவையாக உள்ளது. கடந்த 2, 3 மாத கால காங்கிரஸ் ஆட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. மாநிலத்தைக் கொள்ளையடிக்கிறது. மக்கள் மாற்று வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். கர்நாடக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மக்கள் நன்கறிந்துள்ளார்கள். கர்நாடக காங்கிரஸ் கட்சி உள்ளுக்குள் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது” என்றார்.
இறுதியாக அவரிடம், “பாஜக உடன் கூட்டணி ஏற்படுமானால், உங்கள் தொண்டர்களை எவ்வாறு ஏற்க வைப்பீர்கள்” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”இதில் எந்த பிரச்னையும் இல்லை. 2006இல் நான் பாஜகவோடு கைகோர்த்துள்ளேன். அப்போது 20 மாத காலம் நான் முதல்வராக இருந்துள்ளேன். அந்த 20 மாத நிர்வாகத்தின் காரணமாக என்மீது நல்லெண்ணம் உருவானது" எனப் பதிலளித்துள்ளார்.