”கணவர் பெயருடன் சேர்த்து அழைக்காதீர்கள்” ஜெகதீப் தன்கரிடம் கோபப்பட்ட ஜெயா பச்சன்! கடும் வாக்குவாதம்!

கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் எம்பி ஜெயா பச்சன் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஜெகதீப் தன்கர், ஜெயா பச்சன்
ஜெகதீப் தன்கர், ஜெயா பச்சன்எக்ஸ் தளம்
Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை எம்பியாக உள்ளார். இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் எம்பி ஜெயா பச்சன் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் என்றாலும், அவர் தனது பெயரை, ’ஜெயா அமிதாப் பச்சன்’ என்று அழைப்பதில் விரும்பவில்லை. அதனால் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார். இருந்தபோதிலும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டவர் பாஜக எம்பிக்கள் அவரது பெயரை 'ஜெயா பச்சன்' என அழைக்காமல், ’ஜெயா அமிதாப் பச்சன்’ என்றே அழைத்துவந்தனர். இந்த நிலையில், இன்றும் அதுபோல் அழைக்கப்பட்டதால் ஜெயா பச்சன் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

”என்னை, ‘ஜெயா அமிதாப் பச்சன்’ என்று கூறியதன் தொனி எனக்கு பிடிக்கவில்லை. நான் ஒரு நடிகை. எனக்கு உடல்மொழியும் முக பாவனைகளும் நன்கு புரியும். நாங்கள் உங்களுடன் வேலை செய்பவர்கள்தான். நீங்கள் தலைவர் இருக்கையில் இருக்கலாம். அதற்காக உங்களின் தொனியை ஏற்க முடியாது” என்றார் ஜெயா பச்சன்.

இதற்கு பதிலளித்த ஜகதீப் தன்கர், “ஜெயா ஜி அவர்களே, உங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. நீங்கள் இயக்குநர் சொல்லும்படி நடிக்கும் நடிகை. ஆனால், ஒவ்வொரு நாளும் என்னால் உங்களுக்குப் பாடம் எடுக்க முடியாது. நீங்கள் எனது தொனியைப் பற்றி பேசுகிறீர்களா? இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அவையை மதித்து நடக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிக்க: ”வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவர்”- முக்கிய பாய்ண்ட் உடன் சச்சின் கொடுத்த ஆதரவுக்குரல்!

ஜெகதீப் தன்கர், ஜெயா பச்சன்
“வர்ணாசிரமத்தை கொண்டுவரப் பார்க்கிறீர்களா?” - ஜெகதீப் தன்கருக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி!

இதற்கு ஜெயா பச்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் எம்பிக்கள் ஜெகதீப் தன்கரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும், ஜெயா பச்சனுக்கு ஆதரவாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.

வெளிநடப்பு செய்த ஜெயா பச்சன், "இது, ஓர் அவமானகரமான நிகழ்வு. ராஜ்யசபா தலைவர் நாற்காலியில் இருந்து என்ன சொன்னாலும் அனுமதிக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் தலைவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நாங்கள் ஒன்றும் பள்ளிக் குழந்தைகள் இல்லை. எங்களின் வாரிசுகள் வயதுவந்தவர்களாக உள்ளனர். இதனால்தான் நான் வருத்தப்பட்டேன்.

ஒவ்வொரு முறையும் அன் பார்லிமென்டரி வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பிரபலமாக இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அவர் எதற்காக கவலைப்பட வேண்டும். பெண்களை நோக்கி அவர் ஏன் அத்தகைய வார்த்தைகளை அவர் உதிர்க்க வேண்டும்’’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க: 9 வயது சிறுமிக்கும் திருமணம் செய்யலாம்.. சர்ச்சைக்குரிய மசோதாவை தாக்கல் செய்த ஈராக்!

ஜெகதீப் தன்கர், ஜெயா பச்சன்
பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி

இதுதொடர்பாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றனர். பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது’’ என்று குற்றம்சாட்டினார். அதுபோல் உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் எம்பியான பிரியங்கா சதுர்வேதி, ”நாடாளுமன்றத்தில் ஜெகதீப் தன்கரைவிட அதிக அனுபவம் ஜெயா பச்சனுக்கு உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

சமாஜவாதி கட்சி எம்.பியும் நடிகையுமான ஜெயா பச்சனுக்கும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதம் இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு இரண்டு முறை ஜகதீப் தன்கருக்கும் ஜெயா பச்சனுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஜூலை 29ஆம் தேதி, ”என்னை ’ஜெயா பச்சன்’ என்று அழைத்தால் போதும். ’ஜெயா அமிதாப் பச்சன்’ என்று அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சொந்த சாதனைகள் படைக்காத பெண்களுக்குதான் கணவர் பெயரால் அங்கீகாரம் தேவை. ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்த அடையாளம் இருக்கிறது. அதனால் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம்” என மாநிலங்களவை துணை தலைவரிடம் ஜெயா பச்சன் கூறினார். ஆனால், மீண்டும் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கணவர் பெயருடன் சேர்த்து உச்சரிக்கவே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ஜகதீப் தன்கர், “தேர்தல் ஆணையத்தில் உங்கள் பெயர் அப்படித்தான் இருக்கிறது. முதலில் அதை மாற்றுவதற்கற்கான வழிமுறைகள் இருக்கின்றன. மாற்றிவிட்டு அந்தப் பெயரை இங்கு வந்து சமர்ப்பியுங்கள்” என்றார். அப்போதிலிருந்தே இருவருக்கும் இந்தச் சண்டைகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், அடுத்தடுத்த ஒத்திவைப்புக்குப் பிறகு, மாநிலங்களவை கூட்டத்தொடரை திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே முடித்துவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். இதேபோல, மக்களவையும் ஒருநாள் முன்னதாகவே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க: உடலுறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவர்.. நிராகரித்த உயர்நீதிமன்றம்!

ஜெகதீப் தன்கர், ஜெயா பச்சன்
”267-ன் கீழ் மணிப்பூரை பேசணும்” - டென்ஷன் ஆகி எழுந்த ஜெகதீப் தன்கர்; சஸ்பெண்ட ஆன திரிணாமுல் எம்.பி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com