தலைநகர் டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை பிடித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 8-ம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை மற்றவர்கள் மீது ஊற்றியும் ஹோலி கொண்டாடுவது வழக்கம். இந்த ஹோலி பண்டிகையை காண்பதற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள், ஹோலி கொண்டாட்டத்திலும் ஈடுபடுவார்கள். ஆனால், இந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில், உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாட்டு பெண்கள் மீதும் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுவததாக குற்றச்சாட்டு உண்டு.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில், பஹர்கஞ்ச் பகுதியில் உள்ளூவாசிகளும், வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதன்முறையாக ஹோலி கொண்டாட்டத்தை பார்ப்பதற்காக ஜப்பான் நாட்டிலிருந்து வந்திருந்த 23 வயது சுற்றுலா பெண் பயணியிடம் வண்ணப் பொடிகளை முகத்தில் பூசுவதன் பேரில் அந்தப் பகுதியை சேர்ந்த சிறுவன் உட்பட இளைஞர்கள் சிலர் பாலியல் ரீதியாக அத்துமீறினர். மேலும் அந்தப் பெண்ணின் தலையில் முட்டையை வீசி உடைத்ததுடன், வண்ணம் கலந்த தண்ணீரை அந்தப் பெண் வேண்டாம் என்று கூறியும் வலுக்கட்டாயமாக பீய்ச்சி அடித்தனர்.
அத்துடன் அந்தப் பெண் அங்கிருந்து நகர முயற்சித்தபோது, இளைஞர் ஒருவர் அவரைப் போகவிடாமல் தடுக்க அந்த இளைஞனின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து அந்த ஜப்பானிய இளம் பெண் நகர்ந்து விட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன், விரிவான அறிக்கை சமர்பிக்க கோரி தேசிய மகளிர் ஆணையம் டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவுசெய்த டெல்லி போலீசார், அந்த வீடியோவில் இருக்கும் சம்பவங்கள் சமீபத்தில் நடந்தது தானா? அல்லது முன்பே நடந்ததா என்று ஆய்வுக்கும் உட்படுத்தினர். மேலும் வீடியோவில் இருந்த இளம்பெண்ணை அடையாளம் காண உதவி செய்யுமாறு ஜப்பான் தூதரகத்திற்கும் டெல்லி போலீசார் மின்னஞ்சல் அனுப்பினர். அதன்பின்னர், அந்தப் பகுதியைச் சேர்ந்த போலீசாருடன் இணைந்து வீடியோவில் இருந்தவர்களை தேட ஆரம்பித்தனர். இந்நிலையில், அத்துமீறலில் ஈடுபட்டவர்களில் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் பிடிப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருந்தது போன்றுதான் அன்று நடந்தது என்று ஒத்துக்கொண்டுள்ளதாக மத்திய டெல்லியின் துணை கமிஷனர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வீடியோவில் இருந்த ஜப்பான் சுற்றுலா பெண் பயணி நேற்றே இந்தியாவைவிட்டு வெளியேறி வங்கதேசம் சென்றுவிட்டதாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தற்போது நலமுடன் இருப்பதாக அந்தப் பெண் ட்வீட் செய்திருப்பதாகவும் டெல்லி போலீஸ் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண் பஹர்கஞ்ச் காவல்நிலையத்திலோ, ஜப்பான் தூதரகத்திலோ எந்த புகாரும் கொடுக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், ஹோலி பண்டிகை என்ற கொண்டாட்டத்தின் பேரில் வெளிநாட்டு இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய விவகாரம் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மிரட்டல் விடுத்ததாலேயே அவர் இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாகவும், ட்வீட்டை நீக்கிவிட்டதாகவும் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.