கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தேசிய நெடுஞ்சாலையில் சிஆா்பிஎஃப் வீரா்கள் பயணித்த வாகனத்தைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக் சமீபத்தில் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகிய இரண்டு பெரிய நிகழ்வுகளின்போது அம்மாநில ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி அவர், “புல்வாமா தாக்குதல் சம்பவதுக்கு முன்பாக, சிஆர்பிஎஃப் வீரர்கள் செல்வதற்கு விமானம் கேட்டபோது உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் அமைதி காக்குமாறு எனக்கும் அறிவுறுத்தப்பட்டது” எனக் கூறியிருந்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சத்யபால் தெரிவித்த விஷயங்கள் பொது வெளியில் வைத்து விவாதிக்கக்கூடியது இல்லை. ஏதாவது முறைகேடுகள் நடந்திருப்பதாக அவருக்கு தெரிந்திருந்தால், அவர் பதவியில் இருந்த காலத்திலேயே அதனைத் தெரிவித்திருக்கலாம். இப்போது ஏன் அதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும்? இதுவே அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதை உணர்த்துகிறது” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சத்யபால் மாலிக், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018இல் ஆளுநராக இருந்தபோது, அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த ஆண்டு சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், தற்போது அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து சத்யபால் மாலிக் கூறுகையில், "இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் சிபிஐக்குச் சில தகவல்கள் தேவைப்படுகிறது. அதனால் அவர்கள் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் ராஜஸ்தான் செல்ல இருக்கிறேன். அதனால் வரும் ஏப்ரல் 27 முதல் 29ஆம் தேதிக்குள் ஆஜராகிறேன் என சிபிஐயிடம் கூறி இருக்கிறேன்" என்றார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சத்யபால் மாலிக் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படுவது இது முதல்முறை இல்லை. காப்பீடு தொடர்பான ஊழல் வழக்கு ஒன்றில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் விசாரணை அமைப்புகள் தங்களின் கடமையைச் செய்கின்றன. அவரது குற்றச்சாட்டுக்கும், சிபிஐ சம்மனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
சத்யபால் மாலிக், பாஜக அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கும் எதிராகவும் கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துகளைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.