ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நர்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கடந்த 13ஆம் தேதி, பாதுகாப்புப் படை வீரர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுனர்.
அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், அதிகாரி ஒருவர் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். அத்துடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த 21வது ராணுவ மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் சண்டையில் உயிரிழந்தது. பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் கோகர்நாக் அருகே உள்ள கடோல் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் சுட்டதில் மூன்று ராணுவ அதிகாரிகளும், ஜம்மு காஷ்மீர் மாநில டிஎஸ்பி ஒருவரும் என நான்கு பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை சுற்றி வளைக்க ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. இதற்காக, அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. இதனிடையே, வடகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் ஹத்லங்கா என்ற இடத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்களில் இருவரின் உடல்களை இந்திய ராணுவம் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பக்கம் கொண்டு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டே அந்த பயங்கரவாதியின் உடலை, பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பக்கம் கொண்டு சென்றதாகவும், இதன்மூலம் அந்த நாடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி இருப்பதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே அனந்த்நாக் மாவட்டத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடர்ந்தது. கடந்த 13ஆம் தேதி தொடங்கிய தேடுதல் வேட்டை 7 நாட்களாய் நீடித்தது. இந்த நிலையில் அனந்த்நாக் மாவட்டத்தில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய்குமார், ’இங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் உசைர் கானின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கடோல் வனப் பகுதியில் தொடங்கிய துப்பாக்கிச் சண்டை முடிந்துவிட்டது. ஆனால் தேடுதல் பணி தொடரும்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘இன்னும் தேட வேண்டிய ஒரு பெரிய பகுதி உள்ளது. அங்கு வெடிக்காத குண்டுகள் நிறைய இருக்கலாம், அவை மீட்கப்பட்டு அழிக்கப்படும். அப்பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம்' என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ளனர். பெரும்பாலான பயங்கரவாதிகள் அங்கு பயிற்சி பெற்று, இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.