ஜம்மு -காஷ்மீரில் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 135 பேர் திரும்ப வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்பால் பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் நடத்திய கல் வீச்சு தாக்குதலில் அப்பகுதியில் சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த திருமணி (22) என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 135 பேர் திரும்ப வர முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வீச்சு சம்பவத்தால் ஸ்ரீநகரில் உள்ள சன் ஷன் ஹோட்டலில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்க வேண்டுமென அதிமுக எம்.பி வேணுகோபால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளார்.