காஷ்மீர் பகுதியில் உள்ள 16 தொகுதிகள் மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள எட்டு தொகுதிகளில் நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெற்கு காஷ்மீரில் புல்வாமா, அனந்த்நாக், சோபியான் மற்றும் குல்காம் பகுதிகளிலும், ஜம்முவில் டோடா, கிஸ்த்வார், ராம்பன் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மூவர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். முதற்கட்ட வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அத்துடன், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது.
தேர்தலை ஒட்டி, ராணுவம், சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை உள்ளிட்டவை காஷ்மீர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தீவிரவாத ஊடுருவல் முயற்சிகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ஆம் தேதி 26 தொகுதிகளிலும், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதி 40 தொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு-கஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.