ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க தேசிய மாநாட்டு கட்சி முன் வராத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விடுமோ என அச்சம் இருந்தது.
நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேணுகோபால், குர்ஷித் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில், மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், தேசிய மாநாட்டு கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 32 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. ஐந்து தொகுதிகளை இரு தரப்புமே விட்டுத்தர முன்வராத நிலையில், அங்கு ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியும் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் போட்டியிடும் என ஃபரூக் அப்துல்லா இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் எதிரும் புதிருமாக காங்கிரசும் தேசிய மாநாட்டு கட்சியும் போட்டியிட்டாலும், பிற தொகுதிகளில் கூட்டணி குலையாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தோழமையான போட்டி மிகவும் பொறுப்பான முறையில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் ஜம்மு பகுதியில் போட்டியிடும் என்றும், தேசிய மாநாடு கட்சி பெரும்பாலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் போட்டியிடும் என்றும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல் முறையாக ஜம்மு கஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் ஒருபுறம் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மறுபுறம் பாரதிய ஜனதா கட்சி எனவும், மூன்றாவது அணியாக மக்கள் ஜனநாயக கட்சியும் போட்டியிடுகின்றன.
"I.N.D.I.A." கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை, ஒரே கூட்டணியாக இணைந்து ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இசையவில்லை. அதேபோல், I.N.D.I.A. கூட்டணியில் அங்கமாக உள்ள ஆம் ஆத்மி கட்சி ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.