வடமாநிலங்களில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில், பல இடங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கின்றது. பனியால் மூடப்பட்டு பல பகுதிகள் வெண்பட்டு தரித்தது போன்று காட்சியளிக்கின்றன. ஹிமாச்சலப்பிரதேசத்திலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பனி கொட்டுகிறது. தலைநகர் சிம்லாவில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. மக்கள், தீ மூட்டி குளிரின் பிடியிலிருந்து தப்பி வருகின்றனர். இதேபோன்று ஹரியானா மாநிலத்திலும் கடும் குளிர் வாட்டுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 பன்னாட்டு விமானங்கள் மற்றும் 9 உள்நாட்டு விமானங்களின் சேவை தடைபட்டது. இதன் காரணமாக பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, பனிப்பொழிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழைகளுக்கு உதவிட இரவுநேர தற்காலிகக் கூடாரங்கள் அமைத்துத் தரப்பட்டுள்ளன.