டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டதில் மாணவர் ஒருவர் காயம் அடைந்தார். இதோ உங்கள் விடுதலை எனக் கூறி மாணவர்கள் மீது அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஏராளமான போலீசார், பத்திரிகையாளர்கள் நிறைந்திருந்த இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நொய்டாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கோபால் சர்மா என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், கோபால் சர்மா ஒரு ராம பக்தர் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பாக, தன்னுடைய ஃபேஸ்புக் தளத்தில் கோபால் சர்மா லைவ் வீடியோ பதிவிட்டுள்ளார். அதற்கு முன்பாக பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கருத்துகள் பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஃபேஸ்புக் பக்கத்தில், தான் இறந்துவிட்டால் தன் மீது காவிக் கொடி போர்த்த வேண்டும் என்றும் தன்னுடைய ஆதரவாளர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக என்.டி.டி.வி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த ஃபேஸ்புக் பக்கம் அவருடையதுதானா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, துப்பாக்கியுடன் மாணவர்களை ஒருவர் நீண்ட நேரம் மிரட்டியும் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.