கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பிஷப் பிராங்கோ முல்லகல்லுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள், வழக்கு முடியும் வரை இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்று ரோமன் கத்தோலிக்க தேவாயலத்தின் பிஷப் ஆஞ்சலோ கிரேஸியஸ் உறுதி அளித்துள்ளார்.
ஜலந்தர் மறை மாவட்ட தேவாலய பேராயர், பிராங்கோ முல்லக்கல். கேரளாவைச் சேர்ந்த இவர் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் இருக்கும் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். கேரளா வந்திருந்த அவர், 2014 முதல் 2016 வரை பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவருடன் தங்கியிருந்த 5 கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் ஒரு கன்னியாஸ்திரிக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டயம் தேவாலய நிர்வாகம், மற்ற நான்கு பேரையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
அதை ஏற்காத அந்தக் கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து அதே தேவாலயத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேவாலய நிர்வாகம் கூறியது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கிடைக்கவும், தங்களுக்குப் பாதுகாப்பு கோரியும் முதல்வர் பினராயி விஜயனுக்கு, கன்னியாஸ்திரிகள் அனுபமா, வி.ஜோசபின், அல்பி, அஞ்சிட்டா ஆகியோர் கடிதம் எழுதினர்.
தங்கள் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருக்கிறது. தாங்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், வழக்குப் பாதிக்கும் என்றும் எங்களை பிரித்து இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யவே இப்படி செயல்படுவதாகவும் அதில் அவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், பிஷப் பிராங்கோ முல்லக்கலுக்கு எதிரான ஆதாரங் கள் மற்றும் சாட்சியங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பெண்கள் ஆணையம் வலியுறுத்தியது.
இந்நிலையில் கன்னியாஸ்திரிகள் 4 பேரும் வழக்கு முடியும் வரை குருவிளங்காடு கான்வென்ட்டில் இருந்து எங்கும் இடமாற்றம் செய்யப்பட மாட்டர்கள் என்று ரோமன் கத்தோலிக்க தேவாயல ஜலந்தர் பகுதிக்கான பிஷப், ஆஞ்சலோ கிரேஸியஸ் உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே, ஜலந்தர் டயோசிஸின் செய்தி தொடர்பாளர் பீட்டர் கவும்புரம் கூறும்போது, ‘’கன்னியாஸ்திரிகளின் இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்படவில்லை. அதோடு அது இடமாற்றமும் இல்லை. அவர்களை அவர்களது பழைய கான்வென்ட்டுக்குத்தான் அழைக்கப்பட்டிருக் கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.