சீன எல்லை பிரச்சினை: ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி

சீன எல்லை பிரச்சினை: ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி
சீன எல்லை பிரச்சினை: ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி
Published on

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி நடத்தியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் வெளிநடப்பு செய்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்க்கட்சிகளின் சீன எல்லை விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் குழு தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சீன எல்லை விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். அதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. சென்ற வாரம் முதலே எதிர்க்கட்சிகள் தினசரி இந்த கோரிக்கையை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் சீன ராணுவ எல்லை ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்ட தருணத்திலிருந்து எதிர்கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இன்றும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பின்னர் மீண்டும் அவைக்கு திரும்பி விவாதங்களில் பங்கேற்றன.

இந்நிலையில் பொதுவாக அரசியல் விவகாரங்களில் அதிகம் நாட்டம் செலுத்தாத ஜெய்சங்கர், சீன எல்லை பிரச்சினை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார். அவர் கூறியுள்ள பதிலில், “ராகுல் காந்தியின் உத்தரவுப்படி இந்திய வீரர்கள் சீன எல்லையை காக்கும் பணியில் ஈடுபடவில்லை” என்றுள்ளார். இதுதொடர்பாக தனியார் அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜெய்சங்கர் பேசினார். மேலும் அவர் அந்நிகழ்ச்சியில், “பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுபடி சீன எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னேப்போதும் இல்லாத அளவு அங்கே இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” எனவும் கூறினார்.

சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியுடன் எல்லை பிரச்சனை குறித்த பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஜெய்சங்கர் கடத்த இரண்டு வருடங்களாக முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. `பாஜக ஆட்சிக்காலத்தில் எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது’ என காங்கிரஸ் கட்சியும், `நேரு ஆட்சி காலத்தில் சீனா இந்தியா வசமிருந்த பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது’ என பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவதாக தொடர்கதையாகவே இருக்கிறது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com