சரியான நேரத்துக்கு விமான நிலையத்துக்கு செல்ல முடியாது என்பதால் வெடிகுண்டு புரளி கிளப்பிய நடன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு தினமும் காலை இண்டிகோ விமானம் சென்று வருகிறது. இன்று காலை 5.30 மணியளவில் இண்டிகோ நிறுவனத்துக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு போனை துண்டித்தார். இதையடுத்து இண்டிகோ விமான நிறுவனத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும் அது வெறும் புரளிதான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வழக்கம் போல் விமானம் இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பியவரின் போன் அழைப்பை வைத்து அவர், ஜெய்ப்பூரைச் சேர்ந்த மோகித் குமார் டங் என்பது தெரியவந்தது.
இண்டிகோ நிறுவனத்தினர் அவரிடம் தொடர்புகொண்டு ’இந்த விமானம் புறப்பட இருக்கிறது. அடுத்த விமானத்தில் கண்டிப்பாக இந்த டிக்கெட்டை வைத்து பயணிக்கலாம்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து விமான நிலையத்துக்கு வந்த டங்கிடம் போலீசார் விசாரித்தனர். விமான நிலையத்துக்கு சரியான நேரத்துக்கு வர முடியாது என்பதால் அவர் வெடிகுண்டு புரளியை கிளப்பி இருப்பது தெரியவந்தது.
நடன இயக்குனரான மோகித் குமார் டங்கை கைது செய்து ஜெய்பூர் விமான நிலையம் அருகிலுள்ள சங்க்நேர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.