மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுகன்யா சாந்தா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிர உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலை கையேடுகள், சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதில் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரிக்கப்பட்ட போது, தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களும், மத்திய அரசும் பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க கடந்த ஜனவரியில் உத்தரவிடப்பட்டது.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் பிப்ரவரி மாத அறிவுறுத்தல்கள் போதாது என்றும் சில மாநிலங்கள் சாதிய பாகுபாட்டை ஒப்புக்கொண்டுள்ளன எனவும் வாதிட்டார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். அதாவது, நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் நடக்கும் சாதிய பாகுபாட்டை களைய அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், சிறைச்சாலைகளில் இருக்கும் சாதியப்பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கண்டிப்புடன் கூறினார்.
இதனையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.