மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் “ஜெய் ஜவான் - ஜெய் கிசான்” என்ற முழக்கம் எதிரொலித்து வருகிறது. அதற்கு அர்த்தம் கொடுக்கும் வகையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள்.
போராட்ட களத்திற்கே நேரடியாக வந்து தங்களது ஆதரவை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
“இங்கே இருப்பவர்கள் யார் பாகிஸ்தானை ஆதரிக்கிறார்கள்? இத்தனை நாள் இருந்தும் அப்படியொரு முழக்கத்தை நான் கேட்கவில்லை. விவசாயிகளுக்கு கஷ்டத்தை தரும் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. விவசாயிக்கு பிடிக்காததை ஏன் கொண்டு வந்திருக்கிறீர்கள்? சட்டத்தை திரும்பப் பெறுவதால் அரசுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. விவசாயிகள் சாலையில் போராடும் போது வீட்டிலிருக்க முடியவில்லை. நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். போராடுவோர் தீவிரவாதிகள் கிடையாது” என ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மேத் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
“விவசாயிகள் அமைதியாக போராடி வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் தான் அதை கேட்பதற்கு தயாராக இல்லை. சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும். ராணுவ வீரனாக இருந்தாலும் நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு விவசாயி மற்றொரு விவசாயிக்கு என்றுமே துணை நிற்பான். விவசாயிகள் எல்லாம் சாலைகளில் இருக்கும் பொழுது நான் மட்டும் எப்படி வீட்டில் இருக்க முடியும் அதனால் தான் கிளம்பி வந்துவிட்டேன்” என்கிறார் 30 ஆண்டுகளாக ராணுவத்தில் வேலை செய்தவரான முன்னாள் ராணுவ வீரர் பிர் சிங் சவுகான்.
டெல்லி வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பின்னணி பற்றி சில அரசியல் கட்சித் தலைவர்களே சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கான ஆதரவும் பெருகிக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஓய்வு பெற்ற ராணுவ சங்கங்களை சேர்ந்தவர்கள் டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு வழங்கி வருகின்றனர். இங்கு யாரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களோ, தீவிரவாதிகளோ இல்லை என்று கூறுகிறார்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள்
ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தங்களது பதக்கங்களை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ள நிலையில் மேலும் 50,000 பதக்கங்களை திருப்பி வழங்க பல ஓய்வு பெற்ற ராணுவ சங்கங்கள் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையில் நாட்டை காத்த ராணுவ வீரர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தந்திருப்பது, உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள் விவசாயிகள்.