மதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு

மதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு
மதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு
Published on

ஆந்திராவிலுள்ள மதுபார்களின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு ஜெகன்மோகன் ரெட்டி பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக ஆந்திராவிலுள்ள அரசுப் பள்ளிகளை, அடுத்த ஆண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளாக மாற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தெலுங்கு மற்றும் உருது வழியில் கல்வி கற்க முடியாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில், தெலுங்கு அல்லது உருது ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக கற்பிக்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் தற்போது மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. அதாவது தான் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவிலுள்ள மதுக்கடைகளை முற்றிலும் அகற்றுவதாக ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே உறுதியளித்திருந்தார்.

அதன்படி, தற்போது ஆந்திராவில் செயல்பட்டு வரும் மதுபார்களின் உரிமங்களை ரத்து செய்து அவர் உத்தரவிட்டுளார். இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள ஆணையில், தற்போது ஆந்திராவில் செயல்பட்டு வரும் மதுபார்களின் உரிமங்கள் வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியோடு ரத்து செய்யப்படுகிறது. மதுபார்களுக்கான புதிய உரிமங்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதிதாக மதுபார்கள் வரும்போது தற்போது இருக்கும் அளவைவிட பாதி அளவிலான மதுபார்கள் மட்டுமே செயல்படுவதற்கு உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே செயல்பட்டு வரும் மதுபார்களின் உரிமங்கள் வரும் 2022-ஆம் ஆண்டு வரை இருந்தது. ஆனால் தற்போது அவை அனைத்தும் இந்த ஆண்டு உடன் ரத்து செய்யப்பட்டு மீதி தொகைகள் அந்தந்த கடைகளுக்கு திருப்பித் தர அரசு திட்டமிட்டுள்ளது. மதுக்கடைகளை முற்றிலும் அகற்றுவதன் ஒருபடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக மதுபார் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, “ஆந்திர அரசு எங்களுக்கு அளித்த உரிமம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ளது. அத்துடன் இந்த உரிமத்தை அவர்கள் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கலாம். ஆனால் தற்போது திடீரென ஆந்திர அரசு இந்த உரிமத்தை வரும் டிசம்பர் மாதம் முதல் ரத்து செய்ய உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் கண்டிப்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்” எனத் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் ஆந்திராவில் தனியாம் வசம் இருந்த மதுபான கடைகளின் நிர்வாகங்களை அரசு தன்வசப்படுத்தியது. அத்துடன் 4380 மதுக்கடைகளை 3500 கடைகளாகவும் குறைத்தது. தற்போது மதுபார்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, பாதி அளவிலான மதுபார் கடைகளுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கை ஆந்திரா அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com