ஜம்மு காஷ்மீரில் மக்கள் மீதும் , காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் மீதும் கல்லெறிந்து தாக்குதலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நடந்த கல்லெறி சம்பவத்தில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஒருவர் உயிரிழந்தார். பொதுமக்கள் பலரும் இதனால் தங்களது அமைதியை இழந்து வருகின்றனர். திடீரென கூட்டத்தில் புகுந்து கல்லெறிபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தொடர்ந்து திணறி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக் கிழமையும் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும் சம்பவம் நடைபெற்றது. காவல்துறை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் வழக்கமாக கல்லெறி சம்பத்தை தடுக்கும் எந்த நடவடிக்கையிலும் காவல்துறை ஈடுபடவில்லை. மக்களுக்கு ஆச்சரியம். காவல்துறையை நோக்கியே கல்லெறியப்படுகிறது. எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் தங்களை தற்காத்து மட்டுமே கொள்கிறார்களே என மக்கள் பேசிக் கொண்டனர்.
ஏறக்குறைய கல்லெறிபவர்களோடு சேர்த்து 100க்கும் மேற்பட்டவர்கள் கூடினார். ஆனாலும் இரண்டு பேர் மட்டுமே ஒட்டுமொத்த கூட்டத்திலும் தீவிரமாக கல்லெறியும் சம்பவத்தில் ஈடுபடுவதும், கோஷம் எழுப்புவதுமாக இருந்தனர். முதல்முறையாக கண்ணீர் புகைக் குண்டை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றது போலீஸ். காவல்துறையின் முயற்சி பலனளிக்க கூட்டம் சிதறியது. தொடர்ந்து கல்லெறிய முயன்ற அந்த இரண்டு நபர்களும் , அவர்களோடு சேர்ந்து கல்லெறிந்தவர்களால் பிடிக்கப்பட்டனர்.
மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் அவர்களே தங்களை தடுத்துக் கொள்கிறார்கள் என பேசிக் கொண்டிருக்கும் போதே, இருவரது நெற்றியிலும் துப்பாக்கி வைக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு வந்து கல்லெறிபவர்களை பிடித்தவர் காவல்துறை அதிகாரி என்பது அப்போதுதான் புரிந்தது. மக்களோடு சேர்ந்து தொழுகை நடத்தி விட்டு, கல்லெறி நடத்துபவர்களை அடையாளம் கண்டு, அவர்களோடு சேர்ந்து கல்லெறிவது போல் நடித்து, அவர்களை கைது செய்ய புதிய உத்தியை கையாண்டது காவல்துறை என அப்போதுதான் புரிந்தது.
காவல்துறை பயன்படுத்திய புதிய உத்தியால் யாருக்கும் காயம் ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது. மேலும் உரியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய முடிந்தது.