ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்திலுள்ள நவ்ஷரா செக்டாரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்திய ராணுவம் தரப்பிலும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் இந்திய படைகள் தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். கொல்லப்பட்ட ராணுவ வீரர் டேராடூனைச் சேர்ந்த லன்ஸ் நாயக் சந்தீப்(35) என தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக சந்தீப் பணியாற்றியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக இருநாட்டு படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.