பரப்பன அக்ரஹாரா சிறை நிலவர அறிக்கை வெளியான விவகாரத்தில் தன்னை குறி வைப்பது நியாயமற்றது என கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் கிடைப்பதாக உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளித்த ரூபா, அதுதொடர்பாக இன்றும் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தாமதமாக அறிக்கை சென்று சேர்ந்ததாக வெளியான தகவல் தவறானது. 12.07 மணிக்கு அறிக்கையை பெற்றதை ஒப்புக்கொள்ளும் கையெழுத்து கூட இந்த ஆவணத்தில் உள்ளது. இந்த அறிக்கை எப்படி வெளியானது என்பது குறித்து எனக்கு தெரியாது. இதில் விசாரணை செய்தால் பதிலளிக்க நான் தயாராக உள்ளேன். இந்த நடவடிக்கையால் எனக்கு எந்த லாபமும் இல்லை. முறைகேடுகளை வெளிக்கொணர்வதே என் நோக்கம். என்னை மட்டும் குறி வைப்பது நியாயமல்ல. ஆளைச் சொல்லுங்கள். விதிமுறையை சொல்கிறேன் என்ற நிலை மாற வேண்டும் என்று கூறினார்.
இதனிடையே அரசு அதிகாரியான ரூபா, முன்னறிவிப்பின்றி செய்தியாளர்களைச் சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டு கர்நாடக மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.