“அபிநந்தனுடன் பறந்தது எனக்கு பெருமை” -  தளபதி தனோவா 

“அபிநந்தனுடன் பறந்தது எனக்கு பெருமை” -  தளபதி தனோவா 
“அபிநந்தனுடன் பறந்தது எனக்கு பெருமை” -  தளபதி தனோவா 
Published on

அபிநந்தனுடன் பறந்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார். அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தபோது துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் அவர்சிக்கினார். இதன்பின்னர் அவரை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. 

இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய அபிநந்தன் காயத்திலிருந்து குணமடைய சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இவர் மீண்டும் விமானத்தை இயக்குவதற்கு விமானப்படை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள விமானப்படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா உடன் விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பைசன் ரக விமானத்தில் பறந்தார். இந்தப் பயணத்தை முடித்த பிறகு தளபதி பிஎஸ் தனோவா, “நாங்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டை போட்டுள்ளோம். நான் கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட்டேன். அபிநந்தன் பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் எதிராக சண்டையிட்டார். நான் ஏற்கெனவே அபிநந்தனின் தந்தையுடன் போர் விமானத்தில் பறந்திருக்கிறேன்.

மேலும் நான் கடந்த 1988ஆம் ஆண்டு பணியிலிருந்து விடுபட்டு சென்ற பிறகு 9 மாதங்களுக்குப் பிறகுதான் மீண்டும் பறக்க ஆரம்பித்தேன். ஆனால் அபிநந்தன் 6 மாதங்களில் மீண்டும் பறக்க ஆரம்பித்துவிட்டார். இது அவருக்கு மிகவும் நல்லது. அத்துடன் அவரது பழைய தகுதிகளை அவர் மீண்டும் திரும்ப பெற்றுள்ளார். அவருடன் பறந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.  விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா இன்னும் சில தினங்களில் ஓய்வு பெற இருப்பதால், இதுவே அவரது கடைசி போர் விமான பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com