கர்நாடக அமைச்சர் வீட்டில் ரெய்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக விளக்கமும்..

கர்நாடக அமைச்சர் வீட்டில் ரெய்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக விளக்கமும்..
கர்நாடக அமைச்சர் வீட்டில் ரெய்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக விளக்கமும்..
Published on

கர்நாடக எரிசக்தித்துறை அமைச்சர் சிவக்குமார் வீடு‌களில் ந‌டத்திய அதிரடி சோதனையில் அமைச்சர் வீட்டில் இருந்து 9 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வரு‌மான வரிச்சோதனை எதிர்க்கட்சிகளை மிரட்டும் அரசியல் பழிவாங்கும் செயல் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக வருமானவரித்துறை சோதனையை பாரதிய ஜனதா ஆயுதமாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கேசி வேணுகோபால் கூறுகையில், இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இந்தச் சோதனை குறித்து மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. அரசின் முக்கியமான அமைப்புகள் அரசியல் பழிவாங்கும் செயலுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட், கர்நாடக எரிசக்தித்துறை அமைச்சர் சிவக்குமாரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 39 இ‌டங்களில் அதிகாலை தொடங்கி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்திகள் வந்தன. குஜராத் எம்எல்ஏக்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சிவக்குமாரின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், ரிசார்ட்டில் சிவக்குமாரின் அறையில் மட்டும்தான் சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையின் இறுதியில் 9 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள், டைரி போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன் இந்த வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா, "உள்நோக்கத்தோடு செயல்படவில்லை. அமலாக்கத்துறை சோதனையில் சில விஷயங்கள் தெரியவந்துள்ளன. அதிர்ஷ்டவசமாகவோ, துரதிர்ஷ்டவசமாகவோ கர்நாடக அமைச்சர் சிவக்குமார் அந்த ரிசார்ட்டில் இருந்துள்ளார். இந்த சோதனைக்கும் வரும் 8 ஆம் தேதி குஜராத்தில் நடக்க உள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறினார்.

குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் 57 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 6 பேர் அண்மையில் கட்சியில் இருந்து விலகினர். இவர்களில் 3 பேர் பாரதிய ஜனதாவில் இணைந்ததையடுத்து எஞ்சிய 44 எம்எம்ஏக்களும் குஜராத்தில் இருந்து கர்நாடகாவுக்கு அழைத்து வந்து ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நடந்த இந்த சோதனை மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டே நடத்தப்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com