வயதான தாயைப் பார்த்துக்கொள்ள பெரிய வீடல்ல, இதயமே தேவை - உச்சநீதிமன்றம்

வயதான தாயைப் பார்த்துக்கொள்ள பெரிய வீடல்ல, இதயமே தேவை - உச்சநீதிமன்றம்
வயதான தாயைப் பார்த்துக்கொள்ள பெரிய வீடல்ல, இதயமே தேவை - உச்சநீதிமன்றம்
Published on

வயதான தாயைப் பார்த்துக்கொள்ள பெரிய வீடல்ல, இதயமே தேவை என்று தன் தாயை பராமரிக்க அனுமதி கோரி மகள்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் 89 வயதான வைதேகி சிங் அவரது மகனால் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் தன் சகோதரிகளான புஷ்பா திவாரி மற்றும் காயத்ரி குமார் ஆகியோரை தாயை பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும் தங்களிடம் சொல்லாமல் வேறு இடத்திற்கு வயதான தாயை கொண்டு சென்று விட்டதாக மார்ச் மாதம் ஹேபியஸ் கார்பஸ் மனுத் தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, பீகாரில் உள்ள முசாபர்பூரில் உள்ள மகனின் வீட்டில் தாய் வைதேகி சிங் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பிறகு, மகள்கள் தங்கள் தாயை முழுமையாக பார்க்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஏப்ரல் 28 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வைதேகி சிங் மேம்பட்ட டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு "வாய்மொழி அல்லது உடல் குறிப்புகள் பற்றிய புரிதல் இல்லை" என்றும் கூறப்பட்டது.

தாய் வைதேகி சிங் முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த நீதிமன்றம், அவரது அசையும் அல்லது அசையா சொத்துகள் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனைக்கும் தடை விதித்தது. தாயின் உடல்நலம் மற்றும் மருத்துவத் தேவைகளைக் கவனிக்க மகள்களை அனுமதிப்பது குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் பதிலளிக்குமாறு மகனுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் பதிலளித்த மகன் “மகள்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தாயை வைத்துக்கொள்ள போதுமான இடம் இல்லை” என்று கூறினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் தனஞ்சய ஒய் சந்திரசூட் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு “உங்களிடம் எவ்வளவு பெரிய வீடு உள்ளது என்பது கேள்வி அல்ல, ஆனால் உங்கள் தாயைக் கவனித்துக் கொள்ள எவ்வளவு பெரிய இதயம் உள்ளது என்பதே கேள்வி” என்று தெரிவித்தனர்.

“உங்களிடம் அந்த இதயம் இல்லை. இது நம் நாட்டில் மூத்த குடிமக்களின் சோகம். தாயாருக்கு கடுமையான டிமென்ஷியா (மறதி) உள்ளது. ஆனால் அவருடைய எல்லா சொத்துகளையும் நீங்கள் விற்கிறீர்கள். அவரது கட்டைவிரல் பதிவைப் பெற கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். அவருடைய சொத்துக்கள் தொடர்பான அனைத்து மேலதிக பரிவர்த்தனைகளையும் நாங்கள் நிறுத்துகிறோம். தாயின் பொறுப்பை மகள்கள் ஏற்கட்டும்” என்றும் குறிப்பிட்டனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com