பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட வேளாண் வரியான செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இது பொது மக்களுக்கு சுமையை அதிகரிக்கும், பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கூறினார்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் செஸ் வரி விதிப்பு பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் “செஸ் வருவாயை மத்திய அரசு மட்டுமே பெறுவது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு எதிரானது. எனவே மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரி திரும்பப் பெறப்பட வேண்டும் " என்று அவர் கூறினார்.
2021 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செஸ் எனப்படும் வேளாண் வரியாக பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ 2.50 மற்றும் டீசலுக்கு ரூ.4 ரூபாய் வரி விதித்தார். இருப்பினும், ஏற்கனவே உள்ள கலால் வரிகளை குறைப்பதன் மூலம் செஸ் ஈடுசெய்யப்படுவதால் இது வாடிக்கையாளருக்கு ஒரு சுமையாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே மேற்கு வங்க நிதியமைச்சர் அமித்தும், “ மோடி அரசாங்கம், செஸ் வரியில் மாநிலங்களுக்கு உரிய பங்கை அளிக்காமல், அனைத்து வரியையும் மத்திய அரசே வசூலிக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் அளவு எட்டு முதல் 16 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மாநிலங்களுடன் பகிரப்படக்கூடாது என்பதால், அதனால்தான் அவை உயர்த்தப்படுகின்றன" என்று கூறினார். ராகுல்காந்தியும் மத்திய அரசின் இந்த வரிவிதிப்பை கடுமையாக சாடியிருந்தார்.