மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளது.
அவர் கூறியிருப்பதாவது, “மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதைக் கொடுமையாகக் கருத முடியாது. வாழ்க்கையின் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதே அதன் நோக்கம். ஆனால் கணவரை, அவரது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வந்து வாழச்சொல்வது மனைவி செய்யும் கொடுமையாகக் கருதப்படும்” என்று கூறியிருப்பது சர்ச்சையாக மாறி இருக்கிறது.
சிஐஎஸ்எஃப் உறுப்பினரான அந்த கணவர், தன்னுடைய மனைவி தன்னை கொடுமை செய்வதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக கூறி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், விவகாரத்து தர குடும்ப நல நீதிமன்றம் மறுத்துவிட்டது. குடும்ப நல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மேல்முறையீட்டு மனுவை கணவர் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் கைட் மற்றும் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வுதான் நேற்று இத்தகைய கருத்தினை தெரிவித்து இருந்தது.
“வருமானமே இல்லாத அல்லது மிகக் குறைவான வருமானம் கொண்ட வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள ஒரு மகனுக்கு தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமை உள்ளது; திருமணத்திற்குப் பிறகு மகன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வது இந்து கலாச்சாரத்தில் "விரும்பத்தக்கது" அல்ல” நீதிபதிகள் தெரிவித்தனர்.
“இந்த வழக்கில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மனைவிக்கு கூட்டுக்குடும்பமாக வாழ்வதற்கு விருப்பம் இல்லை. தனது மனைவிக்காக மனுதாரர் வேறு வீட்டிற்கு குடிப்பெயர்த்தார். இருப்பினும், மனைவி அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கணவரிடம் இருந்து குழந்தையை ஒதுக்கி வைப்பதன் மூலம் தந்தை ஸ்தானத்தை அவரிடம் இருந்து பறிக்கப்படுகிறது என கருதுகிறேன்” என்று கூறிய நீதிமன்றம், இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 13(1)இன் கீழ் அந்த நபருக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.