உண்மையான இந்துக்களால் இந்தியாவில் வாழ முடியாத சூழல் உருவாகி வருவதாக காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்துஸ்தானில் உண்மையான இந்துக்களால் வாழவே முடியாது என்பது போன்ற சூழல் உருவாகி வருகிறது. அப்படி வாழ வேண்டுமென்றால், அவர் நகர்ப்புற நக்சலாக இருக்க வேண்டும் அல்லது இருப்பதே தெரியாமல் இருக்க வேண்டும். அப்படியும் இல்லையெனில், அவர் இறந்திருக்க வேண்டும். தற்போது ராஜஸ்தானில் நிகழ்ந்த கொலைக்காக இந்தியாவிடம் கத்தார் நாடு மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
"மூர்ச்சையாகி விட்டேன்"
இதனிடையே, இச்சம்பவம் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஒரு மனிதனை கொடூரமாக கொலை செய்துவிட்டு ஜிகாதிகள் அந்த வீடியோவையும் வெளியிடுகின்றனர். கடவுளின் பெயரால்... என கோஷமிட்டப்படி அவர்கள் அந்த மனிதரை கொலை செய்கின்றனர். இந்த வீடியோக்களை பார்க்க எனக்கு தைரியம் இல்லை. நான் மூர்ச்சையாகி விட்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.