மழையில் தத்தளிக்கும் பெங்களூரு... தலைக்கு ரூ.50 என ஷேர் ஆட்டோவாக செயல்படும் ட்ராக்டர்கள்!

மழையில் தத்தளிக்கும் பெங்களூரு... தலைக்கு ரூ.50 என ஷேர் ஆட்டோவாக செயல்படும் ட்ராக்டர்கள்!
மழையில் தத்தளிக்கும் பெங்களூரு... தலைக்கு ரூ.50 என ஷேர் ஆட்டோவாக செயல்படும் ட்ராக்டர்கள்!
Published on

தொடர்கனமழையால் பெங்களூரு நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பல மென்பொருள் பணியாளர்கள், ட்ராக்டரில் அலுவலகத்துக்கு பயணித்துவருகின்றனர். ஒவ்வொருவரிடமும் ரூ.50 வீதம் கலெக்ட் செய்து, ட்ராக்டர்கள் பிரத்யேக பயண வாகனமாக அங்கு பயன்படுத்தப்படுகிறது.

தாழ்வான பகுதிகள் பலவற்றிலும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்படுகிறது. பல ஏரிகள் நிரம்பி வழிவதாலும், மழைநீர் வடிகால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ரெயின்போ ட்ரைவ் லே அவுட், சன்னி ப்ரூக்ஸ் லே அவுட், சர்ஜாபுர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் படகுகளிலும், டிராக்டர்களிலும், மாணவர்களும், அலுவலகம் செல்வோரும் பயணப்பட்டனர். பல ஐடி நிறுவனங்கள் உள்ள புறவட்ட சாலையின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். தொடர்ந்து நீடிக்கும் வெள்ளத்தால் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐடி நிறுவனங்கள் கூறுகின்றன.

Mahdevapura மற்றும் Bommanahalli பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பேரிடர் மேலாண்மைக்குழுக்களை அனுப்ப அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். சாலைகளில் தேங்கியுள்ள மழைவெள்ளத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே பெங்களூருவுக்கு குடிநீர் தரக்கூடிய பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் தெரிவித்துள்ளது.

இவை அனைத்துக்கும் இடையேவும், மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் யேமலூர் என்ற பகுதியுள்ள மென்பொருள் நிறுவன ஊழியர்கள் ட்ராக்டரில் அலுவலகத்துக்கு பயணம் செய்துவருகின்றனர். அலுவலகத்தில் நிறைய விடுமுறை கொடுப்பதில்லை என்றும், இதனால் தங்களின் பணி பாதிப்பதாகவும் தெரிவிக்கும் அந்த பணியாளர்கள், ட்ராக்டர்களுக்காக காத்திருந்து, பயணித்து வருகின்றனர். ட்ராக்டர் ஓட்டுநர்கள், ஒவ்வொரு பயணத்துக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.50 வாங்குவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com