கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு பொருளாதாரம் உலக அளவில் மந்தநிலையைச் சந்தித்தது. இதன் காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டன. குறிப்பாக மெட்டா, ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ஃட், டிஸ்னி, கூகுள் ஆகியவை சமீபகாலமாக தனது பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் சில ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை அதிரடியாகப் பணி நீக்கம் செய்ய ஆரம்பித்தன.
இந்த நிலையில், கடந்த காலங்களில் இன்போசிஸ், ஹெசிஎல், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்கூட தங்களது பணியாளர்களை வேலையிலிருந்து தூக்கின. குறிப்பாக, இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் இன்டெர்னல் தேர்வில் தேர்ச்சி பெறாத 600 புதிய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதுபோல் ஹெசிஎல் நிறுவனமும் 350 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில், 25 ஆயிரம் பேரை வேலையிலிருந்து ஆட்களை நீக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில், இதற்குப் பதில் எந்தவொரு பணியாளர்களையும் புதிதாக எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் ஒருசில நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதற்கு முன்பு சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் Accenture, ஊழியர்களின் சம்பள உயர்வு, வேரியபிள் பே குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, Accenture நிறுவனம், ’2023ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படமாட்டாது’ என அறிவித்துள்ளது.
ஆனால், ’சட்டப்பூர்வமாக, கட்டாயமாக சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்ற இடங்களில் மற்றும் முக்கியமான திறன் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும்’ எனவும் விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தனது ஊழியர்களுக்கு போனஸ் அளவுகளையும் குறைக்க உள்ளதாகவும், ஊழியர்களுக்கான பதவி உயர்வும் ஜூன் 2024 வரையில் நிறுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலில், கூறப்பட்டிருப்பதாகவும், அதேநேரத்தில், பொருளாதார பிரச்னைகள் மற்றும் வளர்ச்சியில் மந்தநிலைகளை எதிர்கொள்ளும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரத்தின்படி ஊழியர்களின் பணி மற்றும் சம்பளம் ஆகியவை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Accenture நிறுவனத்தில் மொத்தம் 7,33,000 ஊழியர்கள் பணியாற்றுவதாகவும், இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம் மார்ச் 2023இல் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.