கொரோனா வைரஸ் பாதிப்பைக் காரணம் காட்டி தங்களது மாணவர்களுக்கு வழங்கிய வேலை வாய்ப்பை நிறுவனங்கள் மீண்டும் பெறக் கூடாது என அனைத்து ஐ.ஐ.டி.வேலை வாய்ப்பு குழுமம் கோரிக்கை வைத்துள்ளது.
டெல்லி, கான்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள ஐ.ஐ.டி பல்கலைகழங்களில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்குப் படித்து வந்த 4000 மாணவர்களுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கியிருந்தது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்த நிலையில், அமெரிக்க நிறுவனங்களில் தேர்வான ஐ.ஐ.டி குழுமத்தின் 11 மாணவர்களின் வேலை வாய்ப்பானது திரும்பப்பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் ஐ.ஐ.டி குழுமத்திற்கு தாங்கள் வழங்கிய வேலை வாய்ப்பை திரும்பப் பெற இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஐ.ஐ.டி வேலைவாய்ப்பு குழுமம், 2019 - 2020 காலாண்டில் பயின்ற தங்களது மாணவர்களுக்கு நிறுவனங்கள் வழங்கிய வேலைவாய்ப்பு வாக்குறுதியைத் திரும்பப் பெறக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து டெல்லி ஐ.ஐ.டி இயக்குநர் ராம் கோபால் ராவ் கூறும் போது “ ஐ.ஐ.டி குழுமம் சம வாய்ப்பு கொள்கையைப் பின்பற்றுவதால் நிறுவனங்கள் அனைத்து மாணவர்களுக்கும் சம அளவில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இல்லையெனில் பிற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் உங்களது நிலைமையைப் புரிந்து கொள்கிறோம். ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். சில மாதங்கள் ஆனாலும் பரவாயில்லை. ஏற்கனவே நிலவி வரும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், திறமை வாய்ந்த மாணவர்களின் வேலைவாய்ப்பை நீங்கள் திரும்பப் பெறுவதின் மூலம், மேலும் அவர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். அதனை நீங்கள் செய்யாதீர்கள். எங்களது மாணவர்கள் உங்களது கற்பனையை விஞ்சும் அளவிற்குப் பணி செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து டெல்லி கான்பூர் இயக்குநர் அபய் கரண்டிகர் மாணவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது “ சில நிறுவனங்கள் அவர்கள் வழங்கிய வேலை வாய்ப்பை திரும்பப் பெற்றுள்ளன. ஆகையால் கொரோனா தொற்று முடிந்த பின்னர் மறுபடியும் பிரத்யேகமாக வேலை வாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கு முன்னர் ஐ.ஐ.டி மாணவர்களின் உதவியோடு உங்களுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.