“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றம், எப்போதுமே சந்திக்கும் பெரும் பிரச்னை நீதிபதிகள் நியமனம் என்பது தான்.
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள்:
இந்திய அரசியல் சாசன பிரிவு 124 உட்பிரிவு மூன்றின் கீழ் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்த பதவிக்கு நியமிக்கப்படுபவர், இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்க வேண்டும்; குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்; ஒரு வாய்ப்பாக ஜனாதிபதியின் கருத்துபடி ஒரு சட்ட வல்லுனர் யாராவது இதில் இருக்கலாம். இவற்றின்படி தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் சேர்த்து 34 நீதிபதிகள் இருக்கின்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதியை எப்படி நியமிக்கப்படுவர்?
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நான்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான பெயர்களை பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையை சரிபார்த்து சட்டத்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும். பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நிரப்பப்படும்.
கொலிஜியம் - மத்திய அரசு இடையே தொடரும் பிரச்னைகள்...
கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகின்றது. இதனால் உச்ச நீதிமன்றமும் முழு அளவில் இயங்க முடியாமல் பெரும்பாலும் காலியிடங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை வரும் மே 20 ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு ஜூலை மூன்றாம் தேதி தான் மீண்டும் உச்ச நீதிமன்றம் செயல்பட தொடங்கும்.
ஓய்வுபெறும் நீதிபதிகள் பட்டியல்...
இந்த இடைப்பட்ட ஒன்றரை மாத கால இடைவெளியில் மட்டும் 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். இந்த ஆண்டிற்குள் மேலும் 3 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். அதன்படி
* வரும் மே மாதத்துடன் உச்சநீதிமன்ற நீதிபதி எம்ஆர்ஷா, தினேஷ் மகேஸ்வரி,
* ஜூன் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, வி.ராமசுப்பிரமணியம்,
* ஜூலை மாதம் கிருஷ்ணா முராரி,
* அக்டோபர் மாதம் ரவீந்திர பாட்,
* டிசம்பர் மாதம் சஞ்சய் கிஷன் கவுல்
ஆகியோர் ஓய்வு பெற உள்ளனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் உள்ள 3 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். எனவே ஜூலை மாதம் மீண்டும் உச்ச நீதிமன்றம் திறக்கப்பட்டதற்குப் பிறகு புதிய கொலிஜியம் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் பிறகு தான் புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்ய முடியும். ஆகவே விரைவில் உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 30-க்கும் கீழ் குறைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
தீராத பனிப்போர்...
அப்படியே கொடிஜியம் அமைப்பு பெயர்களை பரிந்துரை செய்தாலும் பெரும்பாலான நேரங்களில் அதன் மீது மத்திய அரசு காலதாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. சமீபத்தில் கூட ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.முரளிதர் அவர்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் அமைப்பு மேற்கொண்டிருந்த பரிந்துரையை 6 மாதத்திற்கு மேல் மத்திய அரசு கிடப்பில் போட்டியிருந்ததால் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தங்களது பரிந்துரையை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றிருந்தது. எனவே நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான போர் முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
என்ன பிரச்னை அடுத்தடுத்து வரும்?
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வழங்கிய தகவலின் படி உச்ச நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டுகிறது. உச்ச நீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை விட முடித்து வைக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருந்து வருகின்றது. இந்த சூழலில் நீதிபதிகளின் காலி பணியிடம், இத்தகைய வழக்குகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதோடு, மக்கள் நீதி பெறுவதை தாமதப்படுத்தும் வகையிலும் மாறி வருகிறது.