முதன்முறையாக சிறிய செயற்கைக்கோள்களுக்கான எஸ்.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டை ஏவுகிறது இஸ்ரோ. இரண்டு செயற்கைக்கோள்களுடன் இன்று காலை 9:18 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் பாய்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முதன்முறையாக எஸ்.எஸ்.எல்.வி எனப்படும் சிறிய செயற்கைக்கோள்களுக்கான ராக்கெட்டை இன்று செலுத்தவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் காலை 9:18 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. செயற்கைக்கோள்களை பூமிக்கு அருகிலேயே சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் தனது முதல் பயணத்தில் இரண்டு செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லவுள்ளது.
500 கிலோ வரை எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியிலிருந்து 500 கிலோமீட்டர் தூர சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பயணத்தில் பூமியை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோளையும், நாடு முழுவதுமிருந்து பள்ளி மாணவிகள் உருவாக்கிய மற்றொரு செயற்கை கோளையும் எஸ்.எஸ். எல்.வி ராக்கெட் சுமந்து செல்லவுள்ளது. இஸ்ரோவின் வரலாற்றில் இது மற்றொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.