நவீன தகவல் தொடர்புக்கான ஜிசாட் -29 செயற்கைக் கோளைத் தாங்கியபடி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஜி- சாட் 29 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக் கோளை, ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் எடுத்துச் செல்கிறது. இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் 3.5 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்த உள்ளது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரையோஜெனிக் எஞ்சின் முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. ஜி சாட் 29 செயற்கைக்கோள் மூலம் வருங்காலத்தில் அதிக தொலைதொடர்பு தகவல்களை, குறைந்த நேரத்தில் பரிமாறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஜி-சாட் 29 செயற்கைகோள், இந்தியாவில் ஏவப்படும் 33வது தொலைத்தொடர்பு செயற்கைக் கோளாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67வது ராக்கெட் என்பதோடு, இந்தாண்டு விண்ணில் ஏவப்படும் 5வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.