ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், ஹமாஸுக்கு அரபு நாடுகள் ஆதரவளித்துள்ளன. இதையடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 30 நாட்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்தப் போரில் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது காஸாவுக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. போர் கொடூரமடைந்துவரும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. மேலும், ”ஹமாஸ் படையினரை முழுவதும் அழிக்கும் வரை, போர் நடைபெறும்” என அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், "விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் இஸ்ரேல் பிரதமரை சுட்டுக்கொள்வதற்கான நேரமிது" என்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னிதன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் கலந்துகொண்டு பேசுகையில், "இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் கொண்டுவந்து நிறுத்துவதற்கான விசாரணை நடைபெற்றது. அப்போது, போர்க் குற்றவாளிகளை விசாரணையின்றி சுட்டுக்கொல்லும் நடைமுறை இருந்தது. இது இஸ்ரேல் பிரதமருக்கும் பொருந்தும். உலகத்தின்முன் நெதன்யாகு இன்று போர்க் குற்றவாளியாக நிற்கிறார். பாலஸ்தீனர்கள் மீது அவருடைய படைகளை அனுப்பி அராஜகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதனால், விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் நெதன்யாகுவை சுட்டுக்கொள்வதற்கான நேரமிது" என்றார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி முதலில் பேட்டிங்!