எங்க புழக்கத்திலேயே காணோம்! 2000 ரூபாய் நோட்டுக்கு என்னதான் ஆச்சு? மத்திய அரசு சொல்வதென்ன?

எங்க புழக்கத்திலேயே காணோம்! 2000 ரூபாய் நோட்டுக்கு என்னதான் ஆச்சு? மத்திய அரசு சொல்வதென்ன?
எங்க புழக்கத்திலேயே காணோம்! 2000 ரூபாய் நோட்டுக்கு என்னதான் ஆச்சு? மத்திய அரசு சொல்வதென்ன?
Published on

ஒட்டுமொத்த இந்திய மக்களும் மறக்கவே முடியாத அந்த நாள்!

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து உலக அளவில் பெரும் பரபரப்பை கிளப்பினார் பிரதமர் மோடி. இந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய வடிவிலான 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்படும் என்றும், 2,000, 200 மற்றும் 20 ரூபாய் நோட்டு என்ற புது ரூபாய் தாளையும் நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர்.

அன்றைய தினம் பிரதமர் மோடி ஆற்றிய உரையும், அதன் பிறகு சில மாதங்களுக்கு அந்த நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கமும் இன்றளவும் பலரது நினைவில் இருந்து நிச்சயம் மறந்திருக்காது. அப்படியான ஒரு திடீர் நடவடிக்கைதான் அது.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், 2,000 ரூபாய் நோட்டில் சிப் வைக்கப்படும் என்றெல்லாம் சொல்லி பாஜகவின் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால், கிட்டத்தட்ட 6 ஆண்டுகளை கடந்துள்ள போதும் நாட்டில் உள்ள கருப்பு பணம் மொத்தம் அழிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய அரசு தரப்பில் இருந்து முன்வைக்கப்படவில்லை.

இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தின் போது கேள்வி எழுப்பியபோதும் முறையான பதிலே வரவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் காட்டமான விமர்சனமாகவே இதுகாறும் இருந்து வருகிறது.

புழக்கத்தில் மெல்ல மெல்ல மறைந்து போகும் 2000 ரூபாய் நோட்டுகள்!

இதனையடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 2000 ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாயை மட்டும் புழக்கத்தில் விடப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் காணவே முடியவில்லை. ஏடிஎம்களில் கூட 500, 200, 100 ரூபாய் நோட்டுகள்தான் பெரும்பாலும் வருகிறது. வங்கிகளிலும் மிகக் குறைந்த அளவிலேயே 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அப்படி என்றால் அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே போனது தொடர்ச்சியாக நோட்டுகள் அச்சிடப்படுகிறதா இல்லையா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தது.

மாநிலங்களவையில் எழுப்பட்ட கேள்வியும் அரசின் பதிலும்

இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை மத்திய அரசு நிறுத்திவிட்டதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் சையத் நசீர் ஹுசைன் என்ற உறுப்பினர் எழுத்துப்பூர்வமாக கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதில், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுவிட்டதா? புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தும் திட்டம் உள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்திருந்தார்.

அதன்படி, புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளே போதுமானது என்பதால் 2019-20ம் நிதியாண்டு முதலே நாட்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாகவும், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடக் கூடிய எந்த திட்டமும் இப்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என்றும் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்டிஐ மூலம் கிடைத்த பதில்!

இதுதொடர்பாக, விளக்கம் கேட்டு ஆர்டிஐ மூலம் மனு ஒன்று அனுப்பட்டிருந்தது. அந்த மனுவிற்கு பாரதிய ரிசர்வ் வங்கி முத்ரன் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது. அதில் முதன்மையாக 2019-20, 2020-21, 2021-22 ஆண்டுகளில் 2000 ரூபாய் நோட்டுகள் ஒன்று கூட அச்சிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், 2016-17 நிதியாண்டில் 354.2991 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும், அதன்பிறகு 2017-18 நிதியாண்டில் வெறும் 11.1507 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், 2018-19 ஆம் நிதியாண்டில் அது மேலும் குறைந்து வெறும் 4.669 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டதாகவும் ஆர்டிஐ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதிகரித்த போலி 2000 ரூபாய் நோட்டுகள்!

கடந்த ஆண்டு மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் நாட்டில் போலி 2000 ரூபாய் நோட்டிகளில் புழக்கம் அதிகமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் தகவலின் படி, “நோட்டு அறிமுகம் செய்யப்பட்ட 2016 ஆம் ஆண்டில் 2,272 போலி நோட்டுகள் சிக்கியது. ஆனால், அதுவே 2017 ஆம் ஆண்டில் 74,898 நோட்டுகளாக அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டில் 90,566 போலி 2000 ரூபாய் நோட்டுகளும், 2020 ஆம் ஆண்டில் 2,44,834 நோட்டுகளும் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com