டிக்டாக்கில் பிரபலமான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த செயலி மூலம் கிடைக்கும் புகழ் மன அழுத்தத்துக்கு வித்திடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வயது வித்தியாசம், வசதி வாய்ப்புகள் என எதையும் பாராமல் பலரையும் ஆட்கொள்கிறது மன அழுத்தம். நாளாக நாளாக எண்ணங்களின் குவியல் அழுத்தமாக மாறி, சில நேரங்களில் தற்கொலை வரை கொண்டுபோய் நிறுத்துகிறது. வளரும் தொழில்நுட்பங்களும் அதற்கான வாசலை திறந்துவைக்கின்றன. அதில் ஒன்றாக டிக்டாக் என்ற செயலி பலரையும் ஆட்கொண்டுள்ளது.
டிக்டாக்கில் பலவித வீடியோக்களை பதிவிட்டு பலரும் பிரபலமடைந்து வருகின்றனர். டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமடைந்த பெண் ஒருவருக்கு தேசிய கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கிறது. அந்த அளவுக்கு அவர்களை உயர்த்துகிறது இந்த டிக் டாக். ஆனால் ஒரு கட்டத்தில் அதிக பார்வையாளர்கள் வேண்டும், லைக்ஸ் வேண்டும் என துண்டுதலால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
தமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான சூர்யா என்ற பெயரில் இயங்கும் இளம்பெண், ஜி.பி முத்து போன்றோர்களும் அவ்வப்போது மன சிக்கலுக்கு ஆளாவதாக தெரிகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவந்த சூர்யா என்ற இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பக்குவப்படாத மனநிலையில் உள்ளவர்கள், உணர்ச்சிவயப்பட்டு முடிவு எடுப்பவர்கள், ஏமாற்றம் வந்தால் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போடத் தெரியாதவர்களே தற்கொலைக்குத் தூண்டப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டிக்டாக்கிற்கு அடிமையானவர்களும், பிரபலமடைவதற்காக டிக் டாக்கில் விபரீதமான விடியோக்களை வெளியிடத் துணிபவர்களும் யோசிக்க வேண்டிய நேரமிது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
இதேநேரத்தில் சியாவின் மரணத்தை ஏற்க முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ள நெட்டிசன்கள், அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். சில விநாடிகளில் எடுக்கப்படும் தற்கொலை முடிவுகள் எதற்கும் தீர்வை தராது என்பதை அனைவருமே உணர்ந்து பிரச்னைகளை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.