"ஜன் ஸ்வராஜ்".. பீகாரில் தொடங்குகிறதா பிரசாந்த் கிஷோரின் அரசியல் பயணம்? - ஓர் அலசல்

"ஜன் ஸ்வராஜ்".. பீகாரில் தொடங்குகிறதா பிரசாந்த் கிஷோரின் அரசியல் பயணம்? - ஓர் அலசல்
"ஜன் ஸ்வராஜ்".. பீகாரில் தொடங்குகிறதா பிரசாந்த் கிஷோரின் அரசியல் பயணம்? - ஓர் அலசல்
Published on

காங்கிரஸ் கட்சியில் இணையும் திட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் பயணத்தை தனது சொந்த மாநிலமான பீகாரிலிருந்து தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சுட்டுரையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், "உண்மையான முதலாளிகளான" மக்களிடம் தான் செல்லப்போவதாக சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் அல்லது மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கி தனது புதிய அரசியல் பயணத்திற்கு தொடக்கப்பள்ளி வைப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் அளவுக்கு அவரது சூசக சுட்டுரை கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. பிரசாந்த் கிஷோர் முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அப்போது அமித் ஷா பரிந்துரைப்படி பிரசாந்த் கிஷோருக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது என பேசியதும் குறிப்பிடத்தக்கது.

திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா மற்றும் ஒய் எஸ் ஆர்  காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் தனது ஐ-பேக் நிறுவனம் மூலம் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் வரவுள்ள தேர்தல்களில் பணியாற்ற இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்த் கிஷோர் தொடர்ச்சியாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் ஆலோசனைகள் நடத்தினார். தேர்தல் ஆலோசகராக மட்டும் பணியாற்றாமல், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ளும்படி அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய விடுக்கப்பட்ட அழைப்பை பிரசாந்த் கிஷோர் ஏற்கவில்லை என அந்த கட்சி தெரிவித்தது. பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பொறுப்பு அளித்தால் அது கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என பல முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர். தனக்குள்ள எதிர்ப்பை உணர்ந்துகொண்ட பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் திட்டத்தை கைவிட்டார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை ஏணியாக பயன்படுத்தி பிரசாந்த் கிஷோர் அரசியலில் முக்கிய இடம் பெற முயற்சிக்கிறார் என்றும், காங்கிரசுக்கு எதிராக செயல்படும் பல கட்சிகளுடன் பணிபுரியும் அவரை நம்புவது சரியா எனவும் கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.

இந்நிலையில் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை பிரசாந்த் கிஷோர் அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த உள்ளதாக பிரசாந்த் கிஷோர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். ஐ-பேக் தினசரி செயல்பாடுகளில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளப் போவதாக அவர் தெரிவித்திருப்பதாவது பிரசாந்த் கிஷோர் முழுநேர அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "ஜன் ஸ்வராஜ்" என அவர் சுட்டுரையில் குறிப்பிட்டிருப்பது மக்கள் இயக்கமா அல்லது அரசியல் கட்சியா என உன்னிப்பாக கவனிக்கப்படும் நிலையில், அவர் தனது புதிய அரசியல் பயணத்தை பீகார் மாநிலத்திலிருந்து துவங்க உள்ளார் என்பது சுட்டுரை பதிவில் தெளிவாகிறது.



கடந்த பத்து வருடங்களாக ஜனநாயகத்தில் மக்களுக்கு ஆதரவான கொள்கைகள் உருவாக தான் பாடுபட்டதாக பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் தற்போது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக இருந்து வரும் நிலையில், கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுடன் அவருக்கு இணக்கம் இல்லை என பேசப்படுகிறது. எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் தங்கள் பக்கம் வரும்படி நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்து வருகிறது. அதே சமயத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் தனது புதிய அரசியல் பயணம் பீகார் மாநிலத்தில் தொடங்கும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 - கணபதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com