பிரேடேட்டர், குவாட்ரீம், காக்நைட் உள்ளிட்ட ஸ்பைவர் என அழைக்கப்படும் உளவு மென்பொருட்கள் இந்திய அரசு அமைப்புகளில் பரிசீலனையில் உள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த ஃபைனான்சியல் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுபோன்ற உளவு மென்பொருட்களை பொதுவாக ராணுவ மற்றும் உளவு அமைப்புகள் பயன்படுத்துகின்றன. பெகாசஸ் கடும் சர்ச்சையில் சிக்கியதால் வேறு ஒரு உளவு மென்பொருளைப் பயன்படுத்த பிரேடேட்டர், குவாட்ரீம், காக்நைட் உள்ளிட்ட பல கைப்பேசிகளில் ஊடுருவும் வலிமை படைத்த ஸ்பைவர் பயன்படுத்த இந்திய அரசு அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தவில்லை என இந்திய அரசு மறுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் தங்களுடைய அலைபேசி தகவல்கள் இஸ்ரேலிய நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் கசிந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
சர்ச்சை காரணமாக பெகாசஸ் மென்பொருளைத் தவிர்த்து, புதிய ஸ்பைவர் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். இதனால்தான் பிரேடேட்டர், குவாட்ரீம், காக்நைட் உள்ளிட்ட மென்பொருட்களின் பயன்பாட்டை பரிசீலித்து, இவற்றில் ஒன்றை வாங்க மத்திய அரசு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன என்கிறார்கள், அவர்கள்.
இன்டெலிஜென்ஸ் பீரோ, மிலிட்டரி இன்டெலிஜென்ஸ் அல்லது ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் போன்ற ஓர் அமைப்பு மூலம் புதிய உளவு மென்பொருள் கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றனர். பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய அரசு உளவு பார்த்தது என்கிற குற்றச்சாட்டு நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரேடேட்டர், குவாட்ரீம், காக்நைட் போன்ற உளவு மென்பொருட்களைப் பயன்படுத்தி கைப்பேசி மூலம் உளவு பார்க்கப்பட்டாலும் அதை தொழில்நுட்ப ரீதியாக நிரூபிப்பது கடினம் என கருதப்படுகிறது.
கணபதி சுப்ரமணியம், புதுடெல்லி நிருபர்.