கொரோனா பாதிப்பில் தவித்துவரும் கர்நாடக மக்களை மீட்கும் பணியில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது தலைமையில் குழு ஒன்றை உருவாக்கி செயல்பட்டு ரியல் ஹீரோவாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் இருந்து நாடு மீள்வதற்கு பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். எளிய மனிதர்கள் முதல் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வரை தங்களால் முடிந்த உதவியை இந்த சோதனை காலத்தில் செய்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில், கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி சீமந்த் குமார் சிங். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முதல் அலையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர் இந்த சீமந்த் குமார் சிங். இப்போதும் தனது நற்பண்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஊழல் தடுப்பு துறையில் தற்போது ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் சீமந்த் குமார் சிங், கர்நாடகாவின் 17 மாவட்டங்களில் உள்ள தாலுகா மற்றும் கிராம மருத்துவமனைகளுக்கு தனது நண்பர்களின் உதவியுடன் சுமார் 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகிறார். தற்போதுள்ள இரண்டாம் அலையால், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டல்களின் பற்றாக்குறை இந்த மாவட்டங்களில் நிலவிவந்த தகவல் கிடைத்ததையடுத்து அவர் இந்த உதவியை செய்து வருகிறார்.
ஐபிஎஸ் அதிகாரி சீமந்த் குமார் சிங்கும் அவரது நண்பர்களும் உலகெங்கிலும் இருந்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க ஒரு தனிக்குழுவை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதன்படி, உபகரணங்களை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியானதும், அதனை தேவைப்படும் மாவட்டங்களுக்கு அந்தக் குழு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலமாகவும் பின்னர் உள்ளூர் காவல்துறையினருக்கும் மூலமாகவும் அனுப்பி அதை மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய ஐபிஎஸ் அதிகாரி சீமந்த் குமார் சிங், "நாங்கள் சுமார் 300 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இதுவரை வழங்கியுள்ளோம். அடுத்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். நாங்கள் அனைவரும் தேவைப்படுபவர்களுக்கு உதவ ஒன்றிணைந்தவர்கள். நாங்கள் சமுதாயத்திற்காக எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்" என்று கூறியிருக்கிறார். சீமந்த் குமார் சிங்கின் நெகிழவைக்கும் இந்த பணிகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுவருகிறது.