ரவுடி விகாஷ் துபே குறித்து கான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ்குமார் ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கொலை, ஆள் கடத்தல் , நிலமோசடி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய உத்தரப்பிரதேச காவல்துறையினர் சென்றனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த துபே, காவல்துறை அதிகாரி உட்பட 8 காவலர்களை சுட்டுக்கொன்று தப்பியோடினார்.
நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்ட இந்த சம்பவத்தில், மத்திய பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த விகாஸ் துபே, உத்தரப் பிரதேச சிறப்புப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது மழை பெய்ததால், விகாஸ் துபே இருந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர் தப்ப முயன்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக உத்தரப் பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ்குமார் ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்,
காளான் போன்ற இந்த ரவுடி கூட்டத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்தால்தான் உத்தரபிரதேசம் நிம்மதி பெரும் மூச்சு விடும். தமிழகம் போன்று அல்ல உத்தரபிரதேசம். இங்கு துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. 8 போலீஸ்காரர்களில் 5 போலீஸ்காரர்களின் உடல்களை சிதைத்து போட்டிருந்தனர்; அதை பார்த்ததும் நெஞ்சு பதறிவிட்டது. என்னுடன் வந்த காவலர்கள் அவர்களின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தி அப்படியே கீழே விழுந்துவிட்டனர்.
அமைச்சர் ஒருவரை காவல் நிலைய வளாகத்தில் கொன்றவர் விகாஸ் துபே. அந்த வழக்கில் இருந்தும் வெளி வந்துவிட்டார்.
விகாஸ் துபேவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் ஆதரவாக தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இருக்கின்றனர். உத்தரபிரதேசத்தில் டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கடைசி குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தரும் வரை ஓயமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.