கர்நாடக வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததாக தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் உட்பட மூன்று பேரை கர்நாடக வனத் துறையினர் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் அடுத்த ஏரிக்காடு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (27). இவர் தனது நண்பர்களான நல்லாம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் கவின்குமார் (27) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன் உடன் ஆலாம்பாடி துறை வனப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அந்த காட்சி விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை வைத்து கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனச்சரக அலுவலர்கள், ஒகேனக்கல் வனத் துறையினர் உதவியுடன், ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த பச்சையண்ணன் மகன் மாரிமுத்தை நேற்றிரவு கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு ஏர்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவருடன் வேட்டையாட வந்த, நல்லாம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் கவின்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கர்நாடக மாநில வனத் துறையினர் கைது செய்து, காவிரி ஆற்றை பரிசலில் கடந்து கொள்ளேகால் வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.